மதுரையில் பரபரப்பு... சொத்து தகராறில் பெண் அடித்துக் கொலை - 5 பேர் கைது!

 

மதுரை திருமோகூர் அருகே சொத்துத் தகராறு காரணமாகப் பெண் ஒருவர் குடும்பத்தினராலேயே கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை திருமோகூர் அருகே உள்ள பெருங்குடியில் வசித்து வந்த 49 வயதான அன்னமயில் என்பவருக்கும், அவரது கொழுந்தன் மற்றும் நாத்தனார் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து மற்றும் இடத் தகராறு நிலவி வந்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 18ம் தேதி இவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், அன்னமயிலை தீர்த்துக்கட்ட உறவினர்கள் திட்டமிட்டுள்ளனர்.  இந்நிலையில் நேற்று அன்னமயில் தனது சகோதரியுடன் வீட்டின் முன்பு நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த கும்பல் ஒன்று அவரைப் பயங்கரமான முறையில் கல்லாலும், கடப்பாறையாலும் தாக்கிவிட்டுத் தப்பியோடியுள்ளது.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ஒத்தக்கடை காவல்துறையினர், ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேரை உடனடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.