புதுக்கோட்டையில் பரபரப்பு... திமுகவினர் கொண்டாட்டத்தில் லட்டு, இனிப்புகளைப் பறிமுதல் செய்த போலீசார்!

 

புதுக்கோட்டையில் ரூ.23 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் மற்றும் ரூ.8 கோடி மதிப்பிலான புதிய உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழாவிற்கு முதலமைச்சர் விஜய் நாளை வருகை தரவுள்ள நிலையில், அரசியல் ரீதியான மோதல் சம்பவங்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

புதுக்கோட்டையில் திறக்கப்படவுள்ள புதிய பேருந்து நிலையம் மற்றும் உள்விளையாட்டு அரங்கம் ஆகிய இரு பெரிய திட்டங்களும் திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டுத் தொடங்கப்பட்டவை எனக் கூறி, புதுக்கோட்டையில் திமுகவினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

முதலமைச்சர் வருகையையொட்டி நகரில் பாதுகாப்பு விதிகள் மற்றும் தடைகள் அமலில் இருக்கும் சூழலில், அனுமதியின்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரிடமிருந்து அவர்கள் வைத்திருந்த லட்டுகள் மற்றும் இனிப்புத் தட்டுகளைக் காவல்துறையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.

முதலமைச்சர் விஜய் நாளை புதுக்கோட்டைக்கு வருகை தந்து புதிய பேருந்து நிலையம் மற்றும் விளையாட்டு அரங்கத்தைத் திறந்து வைத்துப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். மேலும், நகரில் பிரமாண்ட ரோடு ஷோ நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

முதல்வர் வருகையை முன்னிட்டு புதுக்கோட்டை நகரில் 4,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் பறக்கக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

திறப்பு விழாவிற்கு முன்னதாகவே திட்டங்களுக்கு உரிமை கோரி திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதும், அவர்களின் இனிப்புகளைக் காவல் துறை பறிமுதல் செய்ததும் அப்பகுதியில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.