தமிழக பாஜகவில் தொடரும் பதற்றம்... உடனே டெல்லிக்கு வர நயினார் நாகேந்திரனுக்கு அழைப்பு!

 

தமிழக பாஜகவிலிருந்து கே. அண்ணாமலை விலகி, தேசியத் தலைவர் நிதின் நபினிடம் 5 பக்கக் கடிதத்தை வழங்கிய மாபெரும் 'பிரேக்கிங்' செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள வேளையில், டெல்லி பா.ஜ.க தலைமையகத்தில் இருந்து மற்றுமொரு முக்கிய நகர்வு வெளியாகியுள்ளது. பா.ஜ.க-வில் இருந்து அண்ணாமலை விலகுவதாக அறிவித்த சில மணி நேரங்களிலேயே, தமிழக பா.ஜ.க-வின் தற்போதைய மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரனை உடனடியாக டெல்லிக்கு வருமாறு கட்சியின் அகில இந்தியத் தலைமை அவசர அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அண்ணாமலை மாற்றப்பட்டு, நயினார் நாகேந்திரன் தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்தே கட்சிக்குள் பல்வேறு அதிருப்திகள் நிலவி வந்ததாகக் கூறப்படும் சூழலில், தற்போதைய டெல்லி அழைப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

அண்ணாமலையின் ராஜினாமா கடிதம் டெல்லி மேலிடத்திற்குச் சென்றதைத் தொடர்ந்து, தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் அடுத்தகட்டக் கட்சி நடவடிக்கைகள் குறித்து அவசரமாக ஆலோசிக்க நயினார் நாகேந்திரனுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலையின் 5 பக்கக் கடிதத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படுமா? அல்லது சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி அவருக்கு மீண்டும் கட்சியில் முக்கியப் பதவி வழங்கப்பட்டுத் தக்க வைக்கப்படுவாரா? என்பது போன்ற கேள்விகளுக்கு இந்த சந்திப்பிற்குப் பின் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.