விடிய விடிய பதற்றம்... மாணவி கொலை வழக்கில் குற்றவாளியை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லாமல் ஊர் ஊராக அழைத்துச் சென்ற போலீசார்?!
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் 12ம் வகுப்பு மாணவி கொலை வழக்கில் கைதான தர்ம முனீஸ்வரனை உடனடியாக சிறையில் அடைக்காமல், காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் வாகனங்களில் அழைத்துச் சென்றது தூத்துக்குடி மற்றும் மதுரை பைபாஸ் சாலைகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குற்றவாளி தர்ம முனீஸ்வரன் தூத்துக்குடி ராஜபாண்டி நகர் பகுதியில் வசித்து வந்தவர். நேற்று மாலை, ஒரு உயர் அதிகாரி தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார், தர்ம முனீஸ்வரன் தங்கியிருந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் அல்லது மாணவியின் உடமைகள் ஏதும் அங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளதா எனச் சோதனை நடத்தப்பட்டது. அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், தர்ம முனீஸ்வரன் ஏற்கனவே அந்தப் பகுதியில் பெண்களை நோட்டமிட்டு அடி வாங்கியவர் என்பது தெரியவந்துள்ளது.
சட்டப்படி 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றாலும், காவல்துறையினர் சில முக்கியக் காரணங்களுக்காக அவரை இடமாற்றம் செய்து வருகின்றனர். குற்றவாளி எவ்வாறு மாணவியைக் கடத்தினார், எங்கு வைத்து வன்கொடுமை செய்தார் என்பதைச் சம்பவ இடத்திற்கே அழைத்துச் சென்று உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த வழக்கில் தர்ம முனீஸ்வரனுக்கு வேறு யாராவது உதவினார்களா? அல்லது அவர் தங்கியிருந்த இடத்தில் அவருக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்? என்பது குறித்தும் ரகசிய விசாரணை நடத்தப்படுகிறது.
பொதுமக்கள் மத்தியில் நிலவும் கடும் ஆத்திரத்தால், நீதிமன்ற வளாகத்தில் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாகக் கருதி, பாதுகாப்பு கருதி ரகசியமாக இடமாற்றம் செய்யப்படலாம். குளத்தூர் காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்ட மூன்று போலீஸ் வாகனங்கள், தூத்துக்குடி - மதுரை பைபாஸ் சாலை வழியாகச் சென்றபோது பொதுமக்கள் திரண்டனர். இதனால் அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த ரகசிய விசாரணைகள் மற்றும் ஆதாரங்கள் சேகரிப்பு முடிந்த பிறகு, இன்று மார்ச் 20ம் தேதி மதியம் அல்லது மாலையில் குற்றவாளி தர்ம முனீஸ்வரன் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, தூத்துக்குடி அல்லது பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.