திருப்பரங்குன்றத்தில் பதற்றம்... 144 தடை உத்தரவு.. போலீசார் குவிப்பு.. ‘சிவப்பு மண்டலமாக’ அறிவிப்பு!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வை முன்னிட்டு, சட்டம்-ஒழுங்குப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டிரோன்கள் (ஆளில்லா குட்டி விமானங்கள்) பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியை ‘சிவப்பு மண்டலமாக’ அறிவித்து மதுரை மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
கார்த்திகை தீபத் திருநாளையொட்டித் திருப்பரங்குன்றம் மலை உச்சித் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதையடுத்து, பாதுகாப்புக் காரணங்களுக்காகத் திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை சிவப்பு மண்டலமாக மதுரை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
தீபம் ஏற்றும் நிகழ்வையொட்டி நேற்றும், இன்றும் என இரு நாட்களுக்கு இந்தத் தடை உத்தரவு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்களைப் பறக்கவிடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல்துறை எச்சரித்துள்ளது.
எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்க, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மலை உச்சித் தூண் பகுதியில் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டதுடன், மலை அடிவாரம் முதல் உச்சி வரை துப்பாக்கி ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மலைப்பாதை மற்றும் தீபத்தூண் அமைந்துள்ள பகுதிகளைத் துல்லியமாகக் கண்காணிக்கப் புதிதாக 70-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதோடு, சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டத்தை உடனுக்குடன் கண்டறியும் அதிநவீன முகத்தை அடையாளம் காணும் கேமராக்களும் அமைக்கப்பட்டுக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி இந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம.ரவிக்குமார் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில், மதுரை உயர் நீதிமன்றத் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் இரு நீதிபதிகள் அமர்வு அனுமதி அளித்திருந்தன. இதனை எதிர்த்துத் தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த்குமார், வி.எம்.பஞ்சோலி அமர்வு, கடந்த 20-ஆம் தேதி இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.
அதன்படி, மதுரை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றம், இன்று கார்த்திகை தீபத் திருநாளன்று ஒருமுறை மட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்றக் கடும் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது. கோயில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே மலை உச்சிக்குச் செல்ல வேண்டும் என்றும், பொதுமக்கள் செல்லவோ, ஊர்வலம் மற்றும் கோஷங்கள் எழுப்பவோ அனுமதி இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, இந்த இடைக்கால உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரித் தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் டி.விஜய் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.