தூத்துக்குடியில் பதற்றம்... எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்ட 100க்கும் மேற்பட்ட திமுகவினர்; போலீசாருடன் தள்ளுமுள்ளு!

 

தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டுள்ள திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் விவகாரத்தில் தற்போது எஸ்பி அலுவலகத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

ஆத்தூர் பேரூராட்சி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணனை, அடுத்தகட்ட விசாரணை மற்றும் நீதிமன்றக் காவலில் வைப்பதற்கான நடவடிக்கைகளுக்காகத் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்  அலுவலகத்திற்குப் போலீசார் அழைத்து வந்துள்ளனர். இந்தத் தகவல் காட்டுத்தீயாகப் பரவியதைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எஸ்.பி. அலுவலக வளாகத்தில் திரண்டுள்ளனர்.

காவல்துறையின் மின்னல் வேகக் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துத் தூத்துக்குடி மாவட்ட திமுகவினர் தங்களது கடுமையான கண்டனங்களை அங்கே பதிவு செய்து வருகின்றனர். முற்றுகைப் போராட்டம்: அனிதா ராதாகிருஷ்ணனை ஏற்றி வந்த போலீஸ் வாகனத்தை அண்ணா அறிவாலய நிர்வாகிகள் மற்றும் திருச்செந்தூர் தொகுதி திமுக தொண்டர்கள் வளைத்து நின்று, தவெக அரசுக்கு எதிராகவும் காவல்துறையைக் கண்டித்தும் அங்கே ஆக்ரோஷமாக முழக்கங்களை எழுப்பினர்.

எஸ்.பி. அலுவலகத்தின் முதன்மை வாயிலை மூடிப் போலீசார் திமுகவினரை உள்ளே செல்ல விடாமல் தடுத்த போது, போலீசாருக்கும் திமுக தொண்டர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்படுவதைத் தவிர்க்கத் தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தைச் சுற்றிப் பாதுகாப்பு வளையம் பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, எஸ்.பி. அலுவலக வீதியில் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திமுகவினரைக் கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்து வருகின்றனர். கலைந்து செல்ல மறுப்பவர்களைப் பேருந்துகளில் ஏற்றிப் போலீஸ் காவலில் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள அனிதா ராதாகிருஷ்ணனிடம் எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து முதற்கட்ட விசாரணைகள் முடிந்த பின்னர், அவர் இன்னும் சற்று நேரத்தில் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட உள்ளார். அதன் பின்னர், அவர் திருச்செந்தூர் அல்லது தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட வாய்ப்புள்ளதாகக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கடுமையான கண்டன அறிக்கையைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் திமுகவினர் திரண்டு வருவது தென் மாவட்ட அரசியல் களத்தில் உச்சகட்டப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.