தூத்துக்குடியில் பரபரப்பு... வடமாநில லாரிகளைச் சிறைபிடித்து தமிழக லாரி உரிமையாளர்கள் போராட்டம்!

 

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சோலார் பொருட்களை ஏற்றிச் சென்ற வடமாநில லாரிகளைத் தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் சிறைபிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் உள்ள டாடா நிறுவனத்திற்குச் சொந்தமான சோலார் ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சோலார் பொருட்கள் கன்டெய்னர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.

தமிழக லாரிகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையைப் புறந்தள்ளிவிட்டு, வடமாநில லாரிகளையும் புக்கிங் ஏஜென்சிகளையும் மட்டுமே ஆல நிர்வாகம் பயன்படுத்தி வருவதாக 'இ-வாகன் சேவை' எனப்படும் தமிழக லாரி உரிமையாளர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆலையிலிருந்து மதுரைக்கு சோலார் பொருட்களை ஏற்றிச் சென்ற வடமாநிலத்தைச் சேர்ந்த 7 கன்டெய்னர் லாரிகள் கயத்தாறு சுங்கச்சாவடி அருகே வந்தபோது, 70-க்கும் மேற்பட்ட தமிழக லாரி உரிமையாளர்கள் திரண்டு வந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு அந்த லாரிகளைச் சிறைபிடித்தனர்.

தமிழகத்தில் தொழில் செய்து விட்டுத் தமிழக லாரிகளைப் பயன்படுத்தாமல் இருப்பது நியாயமல்ல என்றும், இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு விரைந்த கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள், லாரிகளின் ஆவணங்கள் மற்றும் விதிமுறைகள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.