நெல்லையில் பரபரப்பு...ஹோட்டல் உரிமையாளரை வழிமறித்து சராமாரி அரிவாள் வெட்டு!

 

 

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் ஹோட்டல் உரிமையாளரை வழிமறித்து 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.மேலப்பாளையம் ஆண்டாள் தெருவைச் சேர்ந்தவர் காஜா செரிப். இவர் மேலப்பாளையம் மற்றும் பாளையங்கோட்டை பகுதிகளில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், பாளையங்கோட்டை சீவலப்பேரி சாலையில் உள்ள ஹோட்டலில் கணக்கு முடித்துவிட்டு காஜா செரிப் இருசக்கர வாகனத்தில் மேலப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல், காஜா செரிப்பை வழிமறித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் கைகளில் வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த காஜா செரிப் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்தார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஹோட்டல் உரிமையாளரை தாக்கிவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.இந்த தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் ஹோட்டல் உரிமையாளரை வழிமறித்து தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.