மாணவி படுகொலை வழக்கில் கொலையாளிகளை நெருங்கிய போலீசார் - தூத்துக்குடியில் நீடிக்கும் பதற்றம்!
Mar 16, 2026, 07:31 IST
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளைப் பிடிக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
விளாத்திகுளம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி, கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. இது குறித்துப் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தேடி வந்த நிலையில், அருகே உள்ள காட்டுப்பகுதியில் அந்த மாணவி மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். மாணவியின் உடலில் காயங்கள் இருந்ததால், அவர் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதிய மாவட்டக் காவல்துறை, 4 தனிப்படைகளை அமைத்துள்ளது. மாணவியின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாகச் சுற்றித் திரிந்தவர்களிடம் தனிப்படையினர் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினரின் செல்போன் அழைப்பு விவரங்களை வைத்துப் புலனாய்வு நடைபெறுகிறது. மாணவி சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இருந்து தடய அறிவியல் நிபுணர்கள் முக்கிய ஆதாரங்களைச் சேகரித்துள்ளனர்.