மத்திய கிழக்கில் தீவிரமடையும் பதற்றம்... சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை, டிரோன் தாக்குதல்!

 

ஏமனில் அரசுப் படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நிலவி வருகிறது. இந்த மோதலில் அரசுப் படையினருக்குச் சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன. ஏமன் நாட்டின் தலைநகர் சனா உள்ளிட்ட பல பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஈரான் அவர்களுக்கு ஆயுதம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருவதால், ஏமன் பூமியில் இரு நாடுகளும் மறைமுக மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

அமெரிக்கா மற்றும் ஈரான் மோதலின் பின்னணியில், ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். பொதுமக்கள் குடியிருப்புகள், விமான நிலையம், விமானப்படைத் தளம் மற்றும் கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் போன்ற மிக முக்கியமான உள்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் இவர்கள் தாக்குதல் தொடுத்துள்ளனர். இந்தத் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 73 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் சவுதி அரேபியா நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சவுதி அரேபியா மீது நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள சவுதி அரசு, இதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்றும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவங்களால் மத்திய கிழக்குப் பகுதியில் மீண்டும் போர் பதற்றமும் பரபரப்பும் அதிகரித்து வருகிறது.