கள்ளக்குறிச்சி கோழிப்பண்ணையில் பயங்கர தீ விபத்து... 4,500 கோழிக் குஞ்சுகள் தீயில் கருகி பலி!
கள்ளக்குறிச்சி மாவட்டம் விருகாவூர் பகுதியில் அமைந்துள்ள கோழிப்பண்ணையில் இன்று காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி சுமார் 4,500 கோழிக் குஞ்சுகள் தீயில் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தன. மின்கசிவு காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தில், சுமார் ரூ.2.50 லட்சம் மதிப்பிலான கோழிக் குஞ்சுகள் நாசமாகியுள்ளன.
கள்ளக்குறிச்சி மாவட்டம் விருகாவூர் பகுதியைச் சேர்ந்த எழுமலை என்பவருக்குச் சொந்தமான கோழிப்பண்ணையில் இன்று (நவம்பர் 28) காலை திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது.
மின்கசிவு காரணமாகத் தீப்பற்றியதாகக் கூறப்படும் நிலையில், பண்ணைக்குள் இருந்த தீ மளமளவெனப் பரவியதில் அங்கிருந்த சுமார் 4,500 கோழிக் குஞ்சுகள் வெளியேற முடியாமல் தீயில் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தன. உயிரிழந்த கோழிக் குஞ்சுகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.2.50 லட்சம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடன் வாங்கி வளர்த்து வந்த கோழிக் குஞ்சுகள் தீ விபத்தில் மொத்தமாக உயிரிழந்த சம்பவம் கோழிப்பண்ணை உரிமையாளர் எழுமலை மற்றும் விருகாவூர் பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.