பயங்கரம்... உணவுத் திருவிழாவில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு... 2 பேர் பரிதாப பலி, 5 பேர் காயம்... பகீர் சிசிடிவி காட்சிகள்!
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டில் நகரில் வருடாந்திர உணவுத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. சியாட்டில் சென்டர் வளாகத்தில் நடைபெற்ற இந்தத் திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் திரண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், திடீரெனத் தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாகச் சூடு நடத்தியுள்ளார். இந்தத் திடீர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சிக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மாலை 6 மணியளவில் நிகழ்ந்த இந்தத் தாக்குதலில் 2 வயதுக் குழந்தை உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச் சத்தம் கேட்டவுடன் திருவிழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்கள் அலறியடித்துக் கொண்டு நாலாப்புறமும் சிதறி ஓடினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் அவசர மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐந்து பேருக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
உயிரிழந்தவர்களின் விவரங்களை வெளியிடும் முன் அவர்களது குடும்பத்தினருக்குத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர். சம்பவம் நடைபெற்ற சியாட்டில் சென்டர் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் நேரில் செல்ல வேண்டாம் எனக் காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபரைப் பிடிக்கக் காவல் துறையினர் தனிப்படை அமைத்துத் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.