பெங்களூரு கல்குவாரியில் பயங்கரம்.. பாறை சரிந்து விழுந்து 8 தொழிலாளர்கள் உடல் நசுங்கிப் பலி!

 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் கல்குவாரி ஒன்றில், பிரம்மாண்டமான பாறை திடீரென சரிந்து விழுந்த விபத்தில் அங்குப் பணியில் இருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தெற்கு பெங்களூருவின் புறநகர்ப் பகுதியான மதனபட்டணத்தில் 'காவேரி' என்ற தனியார் கல்குவாரி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று மாலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து நடந்த சமயம் அந்த குறிப்பிட்ட குவாரிப் பகுதியில் சுமார் 15 முதல் 20 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ராட்சத ஹிட்டாச்சி (Hitachi) இயந்திரத்தின் மூலம் பெரிய பாறைகளை அகற்றும் பணி நடந்துள்ளது. இயந்திரத்தை இயக்கிய ஓட்டுநர், கீழே தொழிலாளர்கள் நின்று கொண்டிருப்பதைச் சரிவரக் கவனிக்காமல் இயந்திரத்தை இயக்கியதாகக் கூறப்படுகிறது.

இயந்திரத்தின் பலத்த அழுத்தத்தால் அங்கிருந்த ஒரு பிரம்மாண்டமான பாறை நிலைதடுமாறி, கீழே வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களின் மீது திடீரென சரிந்து விழுந்தது.

பாறை சரிந்து விழுந்த வேகத்தில், அதன் அடியில் சிக்கிய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 8 தொழிலாளர்கள் கண் இமைக்கும் நேரத்தில் உடல் நசுங்கிப் பரிதாபமாகக் காற்றில் உயிர் பிரிந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குப் பெங்களூரு தெற்குப் பகுதி போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்புப் படையினர் விரைந்து வந்துள்ளனர். இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தில், ராட்சத இயந்திரங்களின் உதவியோடு பாறைகளை அகற்றித் தற்பொழுது தீவிர மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

வறுமையின் காரணமாகப் பிழைப்புத் தேடிப் பீகாரில் இருந்து பெங்களூருவிற்கு வந்த தொழிலாளர்கள், குவாரி நிர்வாகத்தின் பாதுகாப்பு விதிமுறை மீறல் மற்றும் கவனக்குறைவால் உயிரிழந்த சம்பவம் பெங்களூரு மற்றும் பீகார் மாநில வட்டாரங்களில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.