சேலம் புது பஸ் ஸ்டாண்டில் நள்ளிரவில் பயங்கரம்... வாலிபர் குத்திக்கொலை!
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் அமர்ந்திருந்த மூட்டை தூக்கும் தொழிலாளி ஒருவரை, மர்ம நபர் ஒருவர் குத்தூசியால் குத்திக்கொலை செய்துள்ள சம்பவம் பேருந்து நிலையப் பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளப்பட்டி காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 11:30 மணியளவில், சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள இடைப்பாடி பேருந்து நிறுத்துமிடத்திற்குப் பின்புறம் வாலிபர் ஒருவர் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், அந்த வாலிபருடன் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டுத் தகராறு செய்துள்ளார். ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர், தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான குத்தூசியால் அந்த வாலிபரின் இடது காது மற்றும் இடது மார்புப் பகுதியில் அடுத்தடுத்துக் கொடூரமாகக் குத்தியுள்ளார்.
மார்பிலும் காதிலும் குத்தப்பட்டதால் அந்த வாலிபருக்கு ரத்தம் அதிகமாக வெளியேறி, அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். நள்ளிரவில் அரங்கேறிய இந்த ரத்தக் களரியைக் கண்டு பேருந்து நிலையத்தில் இருந்த சக பயணிகள் அலறியடித்து ஓடினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பள்ளப்பட்டி போலீசார், பலத்த காயமடைந்த வாலிபரை மீட்டுச் சிகிச்சைக்காகச் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த வாலிபர் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கொல்லப்பட்ட வாலிபர் யார் என்று தெரியாமல் இருந்த சூழலில், அவரது உடலில் 'கீர்த்தி', 'கலைராஜ்', 'மகா' ஆகிய பெயர்கள் பச்சை குத்தப்பட்டிருந்தன. இந்த அடையாளங்களை வைத்துப் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் (28) என்பது உறுதி செய்யப்பட்டது.
மூட்டை தூக்கும் தொழிலாளியான வினோத், தனது இரண்டாவது மனைவி கிருத்திகாவுடன் சேலம் பள்ளப்பட்டி அடுத்த '3 ரோடு' பகுதியில் வசித்து வந்துள்ளார். இவருக்கு முன்பே கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணமாகி, பின்னர் கருத்து வேறுபாட்டால் அவரைப் பிரிந்து வாழ்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலை நடந்த புதிய பேருந்து நிலையப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமரா பதிவுகளைப் பள்ளப்பட்டி போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்துள்ளனர்.
அதில், வினோத்துடன் தகராறில் ஈடுபட்ட மர்ம நபர், அவரைப் பாய்ந்து குத்தூசியால் குத்திவிட்டு, எவ்வித பயமுமின்றி சாதாரணமாக நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. கொடூரக் கொலைக்குக் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை வைத்துப் பார்க்கும்போது, கொலையாளியும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளியாக இருக்கக்கூடும் எனப் போலீசார் பலத்த சந்தேகம் கொண்டுள்ளனர். தப்பியோடிய கொலையாளியைப் பிடிக்கப் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.