பெங்களூரில் பயங்கரம்... பாத்ரூமில் குழந்தை பெற்றெடுத்து, துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற இளம்பெண்.. ஐபோன் கம்பெனியில் கொடூரம்!

 

கர்நாடக மாநிலம் பெங்களூரு தேவனஹள்ளி அருகே உள்ள பீரசந்திரா பகுதியில் இயங்கி வரும் ஐபோன் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில், மதியம் கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் சிசுவின் உடல் ஊழியர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

காலை வழக்கம் போல் ஊழியர்கள் பணியில் இருந்தபோது, நிறுவனத்தின் கழிவறைக்குச் சென்ற ஒரு பெண் ஊழியர், அங்கிருந்த குப்பைத் தொட்டியில் பச்சிளம் குழந்தை ஒன்று கிடப்பதைக் கண்டு அலறினார். தகவலறிந்த விஸ்வநாதபுரா போலீசார் விரைந்து வந்து சிசுவின் உடலைக் கைப்பற்றினர்.

சிசுவின் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ரேணுகா என்ற இளம்பெண் மீது சந்தேகம் வலுத்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின.

ரேணுகாவுக்குத் திருமணமாகவில்லை. ஆனால், தனது காதலனுடன் ஏற்பட்ட நெருக்கத்தால் அவர் கர்ப்பமடைந்துள்ளார். இதனை மறைத்து அவர் வேலைக்கு வந்து சென்றுள்ளார். பணியில் இருந்தபோது திடீரென பிரசவ வலி ஏற்படவே, யாருக்கும் தெரியாமல் கழிவறைக்குச் சென்றுள்ளார். அங்கேயே அவருக்குக் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை பிறந்த பதற்றத்திலும், ஊர் உலகிற்குத் தெரிந்தால் அவமானம் ஏற்படும் என்ற பயத்திலும், தான் பெற்றெடுத்த குழந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்று குப்பைத் தொட்டியில் வீசியுள்ளார். பின்னர் அங்கிருந்த ரத்தக் கறைகளைச் சுத்தம் செய்துவிட்டு எதுவுமே தெரியாதது போல் வேலைக்குச் சென்றுள்ளார்.

அதிக ரத்தப்போக்கு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட ரேணுகாவை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீரானதும், சிசுவின் தந்தையான அவரது காதலன் யார்? இக்கொலைக்கு வேறு யாராவது உடந்தையா? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என விஸ்வநாதபுரா போலீசார் தெரிவித்துள்ளனர்.