பெங்களூருவில் பயங்கரம்... தாயின் கள்ளக்காதலன் மனைவி, மைத்துனர் வெட்டிக்கொலை! 16 வயது மகன் வெறித்தனம்!

 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், குடும்பத் தகராறு காரணமாக 16 வயது சிறுவன் ஒருவன் தனது தாயின் கள்ளக்காதலனுடைய மனைவி மற்றும் அவரது தம்பியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு பீனியா பகுதியில் நடந்த இந்த இரட்டைக்கொலைச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்காதல் உறவும் அதனால் ஏற்பட்ட குடும்ப மோதலே இந்த விபரீத முடிவுக்குக் காரணமாக அமைந்துள்ளது.

பீனியா பகுதியில் வசித்து வரும் சாயா என்ற பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மல்லேகவுடா என்பவருக்கும் இடையே நீண்டகாலமாகக் கள்ளக்காதல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் மல்லேகவுடாவின் மனைவி யமுனாவுக்குத் (36) தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த யமுனா, தனது தம்பி சுதீப்புடன் (34) சேர்ந்து சாயாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அங்கு இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் மோதல் முற்றிய நிலையில், தனது தாயைத் திட்டுவதைக் கண்டு ஆத்திரமடைந்த சாயாவின் 16 வயது மகன், வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து யமுனா மற்றும் சுதீப் ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார்.

சிறுவன் நடத்திய இந்தத் திடீர் தாக்குதலில் யமுனா மற்றும் சுதீப் ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பீனியா போலீசார், உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்த 16 வயது சிறுவனை போலீசார் உடனடியாகக் கைது செய்தனர். சிறுவன் என்பதால் அவர் மீதான சட்ட நடைமுறைகள் குறித்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர். மேலும், இந்த மோதலுக்குத் தூண்டுதலாக இருந்தவர்கள் யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.