சென்னையில் பயங்கரம்... பட்டப்பகலில் 4 வயதுக் குழந்தை காரில் கடத்தல்!

 

சென்னை வேளச்சேரி பகுதியில் நெஞ்சை உறைய வைக்கும் வகையில் பட்டப்பகலில் 4 வயதுக் குழந்தை ஒன்று காரில் கடத்தப்பட்ட துணிகரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வேளச்சேரி ஏ.ஜி.எஸ். காலனி பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. இவர் தனது 4 வயதுடைய அன்புப் பேத்தியுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அப்பொழுது, அந்தச் சாலையில் சொகுசுக் கார் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் சிலர், திடீரென சாந்தியை வழிமறித்துத் தகராறில் ஈடுபட்டுள்ளனர். கண் இமைக்கும் நேரத்திற்குள் சாந்தியைத் தள்ளிவிட்டு, அவர் கையில் இருந்த 4 வயது குழந்தையைப் பலவந்தமாக தங்களது காரில் ஏற்றிக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.

கெஞ்சியும் கதறியும் தனது பேத்தியைக் கடத்திச் சென்றதால் நிலைதடுமாறிய சாந்தி, உடனடியாக இச்சம்பவம் குறித்து அருகில் உள்ள ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் கண்ணீர் மல்கப் புகார் அளித்தார். சாந்தி அளித்த புகாரின் பேரில் உடனடியாக களமிறங்கிய ஆதம்பாக்கம் போலீசார், வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

கடத்தல்காரர்களைக் கூண்டோடு பிடிக்கச் சம்பவம் நடந்த ஏ.ஜி.எஸ். காலனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.