சென்னையில் பயங்கரம்... CNG கேஸ் குழாய் உடைந்து பயங்கர தீ விபத்து.. 40 அடி உயரத்திற்கு எழும்பிய தீப்பிழம்பு!
சென்னை மாதவரம் அருகே நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொண்ட பணிகளின் போது, நிலத்தடி இயற்கை எரிவாயு குழாய் எதிர்பாராத விதமாக உடைந்ததால் பயங்கர வாயுக்கசிவு ஏற்பட்டுத் தீப்பிடித்தது. சுமார் 40 அடி உயரத்திற்கு ராட்சத தீப்பிழம்புகள் எழும்பிய இந்த விபத்தில், அருகில் இருந்த கடைகள் மற்றும் வாகனம் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.
சென்னை மாதவரம் மஞ்சம்பாக்கம் சிக்னல் சந்திப்பு அருகே உள்ள பிரதான நெடுஞ்சாலையில், மாநில நெடுஞ்சாலைத் துறையினர் ஜேசிபி எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
ஜேசிபி எந்திரம் கொண்டு நிலத்தைத் தோண்டிய போது, தரைக்கு அடியில் சென்றுகொண்டிருந்த பிரதான சிஎன்ஜி கேஸ் குழாய் மீது எந்திரத்தின் கூர்மையான பகுதி பலமாக மோதியுள்ளது. இதில் குழாய் உடைந்து, அதீத அழுத்தத்துடன் வாயு வெளியேறத் தொடங்கியது.
காற்றில் பரவிய எரிவாயுவில் ஏற்பட்ட உராய்வு காரணமாகத் திடீரெனப் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ அசுர வேகத்தில் பரவி, சுமார் 40 அடி உயரத்திற்கு வான்நோக்கித் தீப்பிழம்புகள் எழும்பியதால் அப்பகுதியே கரும்புகையால் சூழ்ந்தது.
எரிவாயு கசிவு தொடர்ந்து கொண்டே இருந்ததால், தீயின் தீவிரம் கட்டுக்கடங்காமல் அருகில் இருந்த பகுதிகளுக்குப் பரவியது. இந்த பயங்கரத் தீ விபத்தில், மஞ்சம்பாக்கம் சிக்னல் அருகே சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த 4 கடைகள் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு மினி லாரி ஆகியன நொடிப் பொழுதில் தீக்கிரையாகி முற்றிலும் சாம்பலாகின. அதிர்ஷ்டவசமாகக் கடைகளில் இருந்த பொதுமக்களும், லாரி ஓட்டுநரும் உடனடியாக ஓடித் தப்பியதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.
விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் மாதவரம், செங்குன்றம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து 7-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களுடன் 70-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
தீயணைப்புப் படையினர் எரிவாயு நிறுவன அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, உடனடியாக அந்தப் பகுதிக்கான பிரதான சிஎன்ஜி எரிவாயு விநியோகத்தை நிறுத்தச் செய்தனர். அதன் பின்னரே தீயின் வேகம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் தீவிரமாகப் போராடித் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்து காரணமாக மாதவரம் - 100 அடி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாதவரம் போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீசார், விபத்து நடந்த பகுதியைச் சுற்றிலும் பொதுமக்கள் யாரும் வராதவாறு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தினர். மேலும், மாற்றுப் பாதையில் வாகனங்களைத் திருப்பிவிட்டுப் போக்குவரத்தைச் சீரமைத்தனர். இந்த விபத்து குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தகுந்த பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் அலட்சியமாகப் பள்ளம் தோண்டிய ஒப்பந்ததாரர்கள் மீது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.