ராஜஸ்தானில் பயங்கரம்.. டிராக்டர் மீது பேருந்து மோதி 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி; பலர் படுகாயம்!
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் - பலோத்ரா நெடுஞ்சாலையில் இன்று மாலை பேருந்து - டிராக்டர் மோதியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், பலோத்ரா மாவட்டத்தில் உள்ள சர்வாடி கிராமத்திற்கு அருகே ஆம்னி பேருந்து ஒன்று அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதியது. இந்த கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பேருந்தில் பயணம் செய்த பல பயணிகள் படுகாயமடைந்தனர்.
விபத்து நடந்தவுடன் அருகில் இருந்த உள்ளூர்வாசிகள் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். படுகாயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக அந்த நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்து ஓட்டுநரின் அஜாக்கிரதை அல்லது இயந்திரக் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.