சேலத்தில் பயங்கரம்... 2 பெண் குழந்தைகளைத் தூக்கில் தொங்கவிட்டு தந்தையும் தற்கொலை!

 

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே, குடும்பத் தகராறு காரணமாகக் கோபித்துக் கொண்டு மாமியார் வீட்டிற்குச் சென்ற மனைவியைச் சமாதானப்படுத்தச் சென்ற கணவர், தனது இரண்டு பெண் குழந்தைகளையும் கொடூரமாகத் தூக்கில் தொங்கவிட்டுக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வல்லரசு. கட்டிடத் தொழிலாளியான இவருக்கும், இவரது மனைவி ஸ்ரீபிரியாவிற்கும் இடையே கடந்த சில நாட்களாகக் குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஸ்ரீபிரியா, தனது இரண்டு பெண் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

மனைவியை மீண்டும் குடும்பம் நடத்தத் தன்பிறகு அழைத்துச் செல்வதற்காக, வல்லரசு தனது மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு ஸ்ரீபிரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தொடர்ந்து, அன்றைய தினம் இரவு மாமியார் வீட்டிலேயே தங்கியுள்ளார். நள்ளிரவில் வீட்டில் உள்ள அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வேளையில், யாருக்கும் தெரியாமல் தனது இரண்டு பிஞ்சுப் பெண் குழந்தைகளையும் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி, கொடூரமான முறையில் தூக்கில் தொங்கவிட்டுக் கொலை செய்தார். பின்னர், தானும் அதே அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

அதிகாலையில் எழுந்து பார்த்த ஸ்ரீபிரியா மற்றும் அவரது குடும்பத்தினர், அறையில் குழந்தைகளும் வல்லரசும் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து அலறினர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மூன்று பேரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தற்கொலை மற்றும் கொலைக்கான பின்னணி குறித்துப் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத் தகராறில் இரண்டு பச்சிளம் குழந்தைகள் பலியான இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.