அதிகாலையிலேயே பயங்கரம்... வீட்டில் ஃப்ரிட்ஜ் வெடித்து சிதறியதில் பெண் பலி!
சென்னை கொரட்டூரில் உள்ள குடியிருப்பு வீட்டில் ஃப்ரிட்ஜ் வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி, மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொரட்டூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் இன்று அதிகாலை திடீரென ஃப்ரிட்ஜ் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. ஃப்ரிட்ஜ் வெடித்ததில் வீடு முழுவதும் வேகமாகத் தீ பரவி புகை சூழ்ந்தது. இதனால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினர் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர்.
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அகிலா என்ற மாற்றுத்திறனாளி பெண், தீயின் பிடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அகிலாவின் கணவர் மற்றும் மகன் ஆகிய இருவரும் கடுமையான தீக்காயங்களுடன் வீட்டிலிருந்து தப்பித்து உயிர் தப்பினர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொரட்டூர் காவல்துறையினர், உயிரிழந்த அகிலாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஃப்ரிட்ஜில் ஏற்பட்ட மின் கசிவு அல்லது கேஸ் கசிவு காரணமாக இந்த வெடிவிபத்து ஏற்பட்டதா என்பது குறித்துக் காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.