நள்ளிரவில் பயங்கரம்... 50 அடி உயர மேம்பாலத்தில் இருந்து லாரி விழுந்து விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி!

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி ஒன்று சுமார் 50 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து நொறுங்கியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா பகுதியில் உள்ள மேம்பாலத்தில் நேற்று நள்ளிரவு சரக்கு லாரி ஒன்று அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, மேம்பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு சுமார் 50 அடி உயரத்தில் இருந்து கீழே பயங்கர சத்தத்துடன் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கொடூர விபத்தில் லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கி, அதில் பயணித்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உள்ளூர் காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர், தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தால் இந்த விபத்து நடந்ததா அல்லது வாகனத்தில் ஏதேனும் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதா என்பது குறித்து ஜல்னா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.