நடுரோட்டில் பயங்கரம்... நடிகை ஜன்னத் ஜுபைர் மீது கொலைவெறித் தாக்குதல்... காரைத் துரத்திச் சென்ற மர்ம நபர்கள்!
Mar 17, 2026, 10:05 IST
பிரபல இந்தி சீரியல் நடிகை ஜன்னத் ஜுபைர் மற்றும் அவரது தம்பி அயன் ஜுபைர் ஆகியோர் நெடுஞ்சாலையில் காரில் சென்றுக் கொண்டிருந்த போது, மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்டு கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நடிகை ஜன்னத் ஜுபைர் ரஹ்மானி மற்றும் அவரது தம்பி அயன் ஜுபைர் ஆகியோர் நேற்று முன் தினம் மர்ம நபரால் உடல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர். ஜன்னத், அவரது தம்பி அயன் ஆகிய இருவரும் பன்வேல் அருகே நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இவர்களது காரை வழிமறித்துள்ளார். பட்டப்பகலில் அந்த மர்ம நபர் இவர்களது காரைத் துரத்திச் சென்றுள்ளார். பின்னர் நடந்த வாக்குவாதத்தில் ஜன்னத் மற்றும் அயன் மீது வெறித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
"ஜன்னத்தும், அவரது தம்பியும் தாக்கப்பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது என்று இன்ஸ்டாவில் அவரது குழுவினர் பதிவிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த ரசிகர்கள் தங்களது கண்டனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஜன்னத் மற்றும் அயன் இருவரும் தற்போது பாதுகாப்பாக இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை மகாராஷ்டிர மாநில காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது. தாக்குதல் நடத்திய நபர் யார்? எதற்காகத் தாக்கினார்? என்பது குறித்த விவரங்கள் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. "சரிபார்க்கப்படாத தகவல்களையோ அல்லது வதந்திகளையோ பரப்ப வேண்டாம்" என ஜன்னத்தின் குழுவினர் ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.