நடுக்கடலில் பயங்கரம்... படகு மீது கப்பல் மோதி விபத்து - 2 மீனவர்கள் மாயம்!
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சக்தி குளங்கரை துறைமுகத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற 'புனித ஜோசப்' என்ற படகு, நேற்று கன்னியாகுமரிக்கு அருகே சுமார் 120 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளானது. நேற்று மதியம் மீனவர்கள் கடலில் படகை நிறுத்திவிட்டு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த 'எம்.டி சோலிஸ்' என்ற பனாமா நாட்டுச் சரக்கு கப்பல் படகு மீது பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் படகு பலத்த சேதமடைந்து கடலில் மூழ்கியது. படகில் இருந்த மொத்தம் 11 மீனவர்களும் கடலில் தத்தளித்தனர். விபத்தை ஏற்படுத்திய கப்பல் ஊழியர்களே முதலில் மீட்புப் பணியில் ஈடுபட்டு 9 மீனவர்களை மீட்டனர். பின்னர் விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த இந்திய கடலோரக் காவல்படையின் 'அனக்' கப்பல், அந்த 9 மீனவர்களையும் மீட்டு இன்று காலை விழிஞ்ஞம் துறைமுகத்திற்குக் கொண்டு வந்தது. கடலில் மாயமான எஞ்சிய 2 மீனவர்களைத் தேடும் பணியில் கடலோரக் காவல்படை மற்றும் சக மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட 9 மீனவர்களில் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், அவர்கள் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து கடலோரக் காவல் படையினர் மற்றும் மெரைன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய கப்பல் ஓமனில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.