உடுமலை அருகே பயங்கரம்... தோட்டத்திற்குள் புகுந்து பெண்ணைத் தாக்கிய காட்டுப்பன்றி.. கால்முறிவு.. மருத்துவமனையில் அனுமதி!
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே விவசாயத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண் ஒருவரைத் திடீரென புகுந்த காட்டுப்பன்றி தாக்கிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உடுமலை அடுத்த செல்லப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், வழக்கம்போல இன்று காலை தனது விவசாயத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது புதருக்குள் மறைந்திருந்த காட்டுப்பன்றி ஒன்று திடீரென பாய்ந்து வந்து அந்தப் பெண்ணைச் சரமாரியாகத் தாக்கியது. இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அவருக்கு, காலின் இரண்டு இடங்களில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டது.
பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், காட்டுப்பன்றியை விரட்டிவிட்டு அவரை மீட்டனர். ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை உடனடியாக மீட்டு உடுமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சமீபகாலமாக உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் காட்டுப்பன்றிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்துவதுடன், தற்போது மனிதர்களையும் தாக்கத் தொடங்கியிருப்பது மக்களைப் பீதியடையச் செய்துள்ளது. ஏற்கெனவே இது போன்று ஒருமுறை தாக்கி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலர் சிகிச்சைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
"வனத்துறையினர் உடனடியாக இப்பகுதியில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும். குடியிருப்பு மற்றும் விளைநிலங்களுக்குள் புகும் காட்டுப்பன்றிகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனச் செல்லப்பம்பாளையம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.