ஆக.5ல் பயங்கரம்... நிலவில் மோதவிருக்கும் பால்கன்-9 ராக்கெட் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
அமெரிக்காவின் பிரபல ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தால் விண்வெளிக்கு ஏவப்பட்டு, கட்டுப்பாட்டை இழந்த பால்கன்-9 (Falcon 9) ராக்கெட்டின் மேல் பகுதி, நிலவின் மேற்பரப்பில் மோதவுள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி மதியம் 1:14 மணிக்கு (இந்திய நேரப்படி) இந்த மோதல் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலவின் 'ஐன்ஸ்டீன் பள்ளம்' பகுதிக்கு அருகே, மணிக்கு சுமார் 8,700 கி.மீ (வினாடிக்கு 2.4 கி.மீ) அதிவேகத்தில் இந்த ராக்கெட் பகுதி மோதவுள்ளது. இந்த எதிர்பாராத மோதலால் நிலவின் சுற்றுப்பாதைக்கோ அல்லது பூமிக்கோ எந்தவித ஆபத்தும் இல்லை என்று விண்வெளி ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இந்த செயற்கை மோதல் மூலம் நிலவின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்கள், தூசுகளின் நகர்வு மற்றும் உருவாகும் புதிய பள்ளத்தை ஆராய விஞ்ஞானிகளுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இது அமையும். அதேவேளையில், கட்டுப்பாடற்ற முறையில் விண்வெளியில் சுற்றும் கழிவுகளைப் (Space Debris) பாதுகாப்பாக அகற்றுவது எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்தும் எச்சரிக்கையாகவும் இந்தச் சம்பவம் பார்க்கப்படுகிறது.