பிறந்தநாளில் பயங்கரம்... பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட வெட்டிக் கொலை!

 

 

 புதுச்சேரியில் பிறந்தநாள் அன்று பைக்கில் சென்ற ரவுடியை மர்ம கும்பல் ஒன்று பின்தொடர்ந்து வந்து நடுரோட்டில் வெட்டிக் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி கருவடிக்குப்பம் கோமாதா கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (32). இவர் மீது இரண்டு கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், தனது பிறந்தநாள் தினமான நேற்று இவர் கருவடிக்குப்பம் சிவாஜி சிலை மற்றும் கிருஷ்ணா நகர் கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஆனந்தைப் பின்தொடர்ந்து 5 மோட்டார் சைக்கிள்களில் வந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல், அவரது பைக்கை மோதி கீழே தள்ளியுள்ளது. கீழே விழுந்த அவரைச் சுற்றி வளைத்த அந்த கும்பல், கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியது. இதில் படுகாயமடைந்த ஆனந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த லாஸ்பேட்டை போலீசார், ஆனந்தின் உடலைக் கைப்பற்றி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு புதுச்சேரி நவீனா கார்டன் பகுதியில் நடைபெற்ற பாஜக பிரமுகர் விக்கி கொலை வழக்கில் ஆனந்த் முக்கியக் குற்றவாளியாக இருந்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே, அந்தப் படுகொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் இந்தச் சம்பவம் அரங்கேறியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், தப்பியோடிய மர்ம கும்பலைத் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.