டெல்லி, உத்தராகண்டிற்குப் பயங்கரவாதத் தாக்குதல் எச்சரிக்கை - உளவுத்துறை அதிர்ச்சி!

 

தலைநகர் டெல்லி மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் உள்ள முக்கிய ஆன்மீகத் தலங்கள் மற்றும் அரசு நிறுவனங்களைக் குறிவைத்துத் தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என மத்திய உளவுத்துறை விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கையைத் தொடர்ந்து, இரு மாநிலங்களிலும் பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுப் போலீசார் தீவிர உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

உளவுத்துறை அமைப்புகளுக்கு அண்மையில் ரகசிய மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில், டெல்லி மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களின் முக்கியப் பொது இடங்கள் தகர்க்கப்படும் எனத் தீவிரவாத அமைப்புகள் எச்சரித்திருந்தன.

அந்த மின்னஞ்சலில் குறிப்பாக இரு மாநிலங்களிலும் உள்ள பிரசித்தி பெற்ற பெரிய கோயில்கள், முக்கிய அரசு அலுவலகங்கள், பிரதான ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள் மற்றும் காவல் துறை கட்டுப்பாட்டு மையங்கள் ஆகியவை தங்களின் முதன்மை இலக்குகளாகக் குறிப்பிடப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. மேலும், சில முக்கிய அரசியல் தலைவர்களின் பெயர்களும் அதில் இடம்பெற்றிருந்தது பாதுகாப்புப் படையினரிடையே கூடுதல் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் திடீர் மிரட்டலின் பின்னணியில் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்புகளின் தொடர்பு இருக்கலாம் என உளவுத்துறை சந்தேகிக்கிறது. உத்தராகண்டின் ருத்ரபிரயாக் மற்றும் டேராடூன் எல்லைப் பகுதிகளில் சமீப நாட்களாகப் போலீசாருக்கும், ஒரு குறிப்பிட்ட சீக்கியக் குழுவினருக்கும் இடையே நிலவி வந்த சில உள்ளூர் அசாதாரணச் சூழ்நிலைகள் மற்றும் கைது நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்த மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மின்னஞ்சலின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, டெல்லி போலீசாரும் உத்தராகண்ட் மாநில போலீசாரும் மத்தியப் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து கூட்டுப் பாதுகாப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளனர். டெல்லி செங்கோட்டை, சாந்தினி சவுக் உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் உத்தராகண்டின் ஆன்மீகத் தலங்களில் கூடுதல் போலீசார் ஆயுதங்களுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எல்லையோரச் சோதனைச் சாவடிகள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் சந்தேகத்திற்கிடமான நபர்களின் உடமைகள் தீவிரத் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த மிரட்டல் மின்னஞ்சலின் உண்மைத் தன்மை குறித்தும், அது எங்கிருந்து யாரால் அனுப்பப்பட்டது என்பது குறித்தும் டெல்லி காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவு மற்றும் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர டிஜிட்டல் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும், ஏதேனும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டால் உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.