தாய்லாந்தில் ராணுவ சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – 5 வீரர்கள் பலி!
தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் அமைந்த நராதிவெட் மாகாணத்தில் உள்ள ராணுவ சோதனைச்சாவடியைக் குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். தாய்லாந்தின் நராதிவெட் மாகாணம், புகிடா சமி நகரில் அமைந்துள்ள ராணுவ சோதனைச்சாவடியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது:
கடந்த புதன்கிழமை நள்ளிரவு நேரத்தில், மோட்டார் சைக்கிள்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் ராணுவ சோதனைக் சாவடியை திடீரெனச் சூழ்ந்துகொண்டனர். சோதனைச்சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மீது அக்கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
பயங்கரவாதிகள் நடத்திய இந்தத் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த பாதுகாப்புப் படையினர் உடனடியாகப் பதில் தாக்குதலில் ஈடுபடுவதற்குள் பெரும் அசம்பாவிதம் நிகழ்ந்தது. பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில், தாய்லாந்து ராணுவத்தைச் சேர்ந்த 5 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இத்தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் ராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. தப்பியோடிய பயங்கரவாதக் கும்பலைத் தேடும் பணியிலும், தாக்குதலின் பின்னணி குறித்த தீவிர விசாரணையிலும் தாய்லாந்து ராணுவம் ஈடுபட்டுள்ளது.
தாய்லாந்து எல்லைப் பகுதியில் ராணுவ சோதனைச்சாவடியைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ள இந்த இரக்கமற்ற தாக்குதல் சம்பவத்திற்குப் பலரும் தங்களது கடும் கண்டனத்தைப் பதிவிட்டு வருகின்றனர்.