மே 9ல் பலப்பரீட்சை... விஜய்க்கு 2 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு!

 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்றுள்ள தவெக தலைவர் விஜய், இன்று சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கரைச் சந்தித்து முறைப்படி ஆட்சியமைக்க உரிமை கோரினார். சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, ஆளுநர் மாளிகை அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆட்சியமைக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்தை விஜய் உடனடியாக வழங்காததால், அவருக்கு ஆளுநர் சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளார். திட்டமிட்டபடி நாளை (மே 7) விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்கலாம். பதவியேற்ற இரண்டு நாட்களுக்குள் (மே 9-ம் தேதிக்குள்) சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை விஜய் நிரூபிக்க வேண்டும்.

தவெக-விற்குத் தற்போதைக்கு 108 இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், மீதமுள்ள 10 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைத் திரட்ட வேண்டிய கட்டாயம் விஜய்க்கு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் சில சுயேச்சை அல்லது சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெறத் தவெக தரப்பு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இருப்பினும், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் இன்னும் தங்களது இறுதி முடிவை அறிவிக்காதது தவெக-விற்குச் சவாலாக உள்ளது.

நாளை முதலமைச்சராகப் பதவியேற்றாலும், வரும் சனிக்கிழமை (மே 9) நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில்தான் விஜய்யின் அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்பட உள்ளது. இதில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறினால், தமிழகத்தில் மீண்டும் அரசியல் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் அடுத்த 48 மணிநேரம் தமிழக அரசியலில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.