ஜூலை 4, 5 தேதிகளில் தமிழகம் முழுவதும்  2.29 லட்சம் ஆசிரியர்கள் , 833 மையங்களில்  சிறப்பு தகுதி தேர்வு!  

 

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்காகச் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான முதல் தாள் தேர்வு வருகிற 4 ஆம் தேதியும், உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாள் தேர்வு 5 ஆம் தேதியும் காலையில் நடைபெற உள்ளது. இதற்காகத் தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் மொத்தம் 833 தேர்வு மையங்கள் தயார் நிலையில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சிறப்புத் தேர்வை மாநிலம் முழுவதும் மொத்தம் 2.29 லட்சம் ஆசிரியர்கள் எழுத உள்ளதாகத் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இதில் முதல் தாள் தேர்வை 61,372 ஆசிரியர்களும், இரண்டாம் தாள் தேர்வை 1,67,648 ஆசிரியர்களும் எழுத விண்ணப்பித்துள்ளனர். முதல் தாள் தேர்விற்காக 221 மையங்களும், இரண்டாம் தாள் தேர்விற்காக 612 மையங்களும் பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டு அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுத வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கண்பார்வை குறைபாடுடைய ஆசிரியர்களின் வசதிக்காகத் தேர்வு அறைகள் அனைத்தும் தரைத் தளங்களிலேயே அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வுகள் எவ்வித முறைகேடுகளும் இன்றி நேர்மையாக நடப்பதை உறுதி செய்யக் கூடுதல் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக்கல்வித் துறை இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்கள் மாவட்ட வாரியாகத் தேர்வு கண்காணிப்புப் பொறுப்புகளில் நேரடியாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதன்படி இயக்குனர் கண்ணப்பன் செங்கல்பட்டு மாவட்டத்திலும், தொடக்கக்கல்வி இயக்குனர் நரேஷ் திருவள்ளூர் மாவட்டத்திலும், இயக்குனர் லதா சென்னை மாவட்டத்திலும் பணிகளை மேற்பார்வையிடுவர். இது தவிர உஷாராணி, குப்புசாமி, எஸ். உமா, சுகன்யா ஆகிய அதிகாரிகளும் மற்ற மாவட்டங்களில் தேர்வுப் பணிகளைத் தீவிரமாகக் கண்காணிக்க உள்ளனர்.