உயிருக்கு ஆபத்தான நிலையில் முதலை என தகவல்... அருகில் சென்ற அதிகாரிகளுக்கு அதிர்ச்சி!

 

 

அமெரிக்காவில் உடல்நலம் பாதிக்கப்பட்ட முதலை ஒன்று அசையாமல் கிடப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து மீட்கச் சென்ற விலங்கு நல அதிகாரிகளுக்கு வித்தியாசமான அனுபவம் காத்திருந்தது. அங்கு கிடந்தது உண்மையான முதலை அல்ல; காற்றடைக்கப்பட்ட நீச்சல் குள பொம்மை என்பது தெரியவந்தது.

allowfullscreen

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சுகர் லேண்ட் நகரில் இந்த சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. கடந்த 12-ம் தேதி அங்குள்ள விலங்கு நல சேவை மையத்துக்கு அவசர அழைப்பு வந்தது. அதில், ஒரு முதலை உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் அசையாமல் கிடப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து விலங்கு நல அதிகாரி பெரெஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். தொலைவில் இருந்து பார்த்தபோது அந்த உருவம் உண்மையான முதலை போலவே காட்சியளித்தது. இதனால் எச்சரிக்கையுடன் அருகில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போதுதான் அது உயிருள்ள முதலை அல்ல என்பதும், நீச்சல் குளத்தில் பயன்படுத்தப்படும் காற்றடைக்கப்பட்ட முதலை வடிவ மிதவை பொம்மை என்பதும் தெரியவந்தது.

இந்த சம்பவத்தை சுகர் லேண்ட் விலங்கு நல சேவை மையம் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது. பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களைத் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும், அப்பகுதியில் உண்மையான முதலைகள் நடமாட்டம் இருப்பதால் இதுபோன்ற சோதனைகள் அவசியம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.