தாய் மாமன் தங்க மோதிர திட்டம்: ஒரு குடும்பத்தில் எத்தனை குழந்தைகளுக்கு மோதிரம் கிடைக்கும்?!
தமிழ்நாடு அரசு செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைப்படுத்தவுள்ள 'தாய் மாமன் தங்க மோதிர திட்டத்தின்' கீழ், பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க நாணயம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்தில் பிறக்கும் முதல் குழந்தை, இரண்டாம் குழந்தை அல்லது அதற்கு மேல் எத்தனை குழந்தைகள் பிறந்தாலும், எந்தவிதக் கட்டுப்பாடோ அல்லது தடைகளோ இன்றி இத்திட்டத்தின் கீழ் 1 கிராம் தங்க நாணயம்/மோதிரம் வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தியாவில் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் சரிந்து வருவதைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.
பயனாளிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். பிரசவம் அரசு மருத்துவமனைகளிலோ அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ நடந்திருக்க வேண்டும். தாய்மார்கள் RCH ID உடன் PICME அமைப்பில் கட்டாயமாகப் பதிவு செய்திருக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் புதிதாகப் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் இத்திட்டம் முழுமையாகப் பொருந்தும்.