செப்.28-ல் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தொடக்கம் - அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்கம்!

 

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் எடைகொண்ட தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், இத்திட்டத்தை வரும் 28-ஆம் தேதி தொடங்கி வைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழர் பண்பாட்டின் பாரம்பரியமான தாய்மாமன் சீர்மரபைப் பிரதிபலிக்கும் வகையில், அரசு மருத்துவமனைகளில் நடக்கும் பிரசவங்களை ஊக்குவிக்கவும், தாய்-சேய் நலனை மேம்படுத்தவும் இத்திட்டம் வழிவகை செய்கிறது.

தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். கர்ப்பிணி மற்றும் குழந்தைகள் கூட்டுக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு மென்பொருளில் பதிவு செய்து RCH அடையாள எண் பெற்றிருப்பது அவசியமாகும்.

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஒவ்வொரு ஒரு கிராம் தங்க மோதிரமும், தனித்துவமான வரிசை எண்ணையும் சேதப்படுத்த முடியாத பாதுகாப்புப் பெட்டகத்தையும் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக முதற்கட்டமாக 1,28,000 தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஜூன் 22-ஆம் தேதி முதல் திட்டம் தொடங்கப்படும் நாள் வரை அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் போது இந்த மோதிரங்கள் வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.