தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வரும் செப்.15ல் தொடக்கம்!
தமிழக அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களின் குழந்தைகளைப் பாராட்டும் விதமாக, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு வழங்கப்படும் புதுமைப் பெண் திட்டம் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்களின் வரிசையில், ஒரு புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க நலத்திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ வரும் செப்டம்பர் மாதம் முதல் மாநிலம் முழுவதும் முறைப்படி அமலுக்கு வரவுள்ளது.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதல் இப்புதிய திட்டம் தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்டு, இங்கு நிரந்தரமாக வசித்து வரும் தாய்மார்களுக்கு, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் இந்த 1 கிராம் தங்க மோதிரம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பிரசவித்த தாய்மார்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சியையும், பொருளாதார ரீதியாக ஒரு சிறு சேமிப்பையும் வழங்கும் நோக்கில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்கள், தாலுகா மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு இத்திட்டம் தங்கு தடையின்றிச் சென்றடைவதை உறுதி செய்யச் சுகாதாரத்துறை விரிவான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
இந்த உன்னதமான ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை’ எவ்விதத் தொய்வுமின்றி முழுமையாகச் செயல்படுத்துவதற்காக, தமிழக அரசு ஆண்டுதோறும் ரூ.755 கோடி நிதியை இதற்கெனத் பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்யவுள்ளது. அரசின் இந்த அதிரடி அறிவிப்பு, ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்துத் தாய்மார்களிடையே பெரும் வரவேற்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.