தாய்லாந்தில்  சுற்றுலாச் சென்ற  இளைஞர்களைக் கடத்தி சித்ரவதை ... 5 இந்தியர்கள் கைது!

 

தாய்லாந்தில் சுற்றுலா சென்ற இந்திய இளைஞர்களைக் கடத்தி சித்ரவதை செய்து பணம் பறிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த மோஹித் (23), ஆசிஷ் (24) மற்றும் ஹிமான்ஷு (20) ஆகிய 3 இளைஞர்கள் குறைந்த செலவில் 7 நாட்கள் சுற்றுலா திட்டத்தில் தாய்லாந்து சென்றனர். அங்கு அவர்களைச் சந்தித்த மர்ம நபர்கள் சிலர் பட்டயா பகுதிக்கு அழைத்துச் சென்று ஒரு வீட்டில் அடைத்து வைத்தனர். பின்னர் அவர்களின் கை, கால்களைக் கட்டிப் போட்டுத் தாக்கி சித்ரவதை செய்து தலா ரூ.40 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் இந்தியத் தூதரக உதவியுடன் தாய்லாந்து காவல் துறை களத்தில் இறங்கியது. கடத்தல்காரர்கள் குடும்பத்தினரிடம் வீடியோ காலில் பேசிய காட்சிகளைச் சிசிடிவி ஆதாரங்களுடன் ஆய்வு செய்த காவல் துறை இருப்பிடத்தைக் கண்டறிந்தது. பட்டயா பகுதியில் உள்ள 2 மாடி குடியிருப்பில் அடைக்கப்பட்டிருந்த 3 இந்திய இளைஞர்களையும் காவல் துறையினர் அதிரடியாக மீட்டனர். அதே நேரத்தில் முகத்தில் ரத்தம் வழிவது போல் காட்ட கடத்தல்காரர்கள் சிவப்புச் சாயத்தைப் பயன்படுத்திய அதிர்ச்சி தகவலும் அம்பலமானது.

இந்தக் கொடூரக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட அவதார் சிங் (38), ஜக்ஜித் சிங் (38), ராம்பலக் குமார் (24), சுக்பிர் சிங் (37) மற்றும் குல்ரா சிங் (27) ஆகிய 5 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். பாங்காக்கில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த இந்த 5 பேரையும் சுற்றி வளைத்துத் தாய்லாந்து காவல் துறையினர்  கைது செய்தனர். சமூக வலைதளம் மூலம் பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் கொடுத்த திட்டத்தின் படியே இந்த கடத்தலைச் செய்ததாகக் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.துபாயில் இருந்து இயக்கப்பட்ட இந்த சதித் திட்டம் குறித்துக் காவல் துறையினர் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.