“தளபதி.. என் குடும்பத்தைக் காப்பாத்துங்க!” - விஜய் வாகனத்தில் அடிபட்ட ஓட்டுநர் சிகிச்சைக்காகக் கண்ணீர் மல்க வேண்டுகோள்!
செங்குன்றம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது விபத்தில் சிக்கி வாழ்வாதாரத்தை இழந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தனக்கு மருத்துவ உதவி செய்யுமாறு தவெக தலைவர் விஜய்க்கு விடுத்துள்ள கோரிக்கை ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த சில நாட்களாகத் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். செங்குன்றம் அருகே அவர் வாகனத்தில் சென்றபோது, அவரைக் காண்பதற்காகவும், செல்ஃபி எடுப்பதற்காகவும் தொண்டர்கள் முண்டியடித்தனர்.
அப்போது கூட்ட நெரிசலில் சிக்கிய அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், எதிர்பாராத விதமாக விஜய்யின் பரப்புரை வாகனத்திற்கு மிக அருகில் வந்துள்ளார். இதில் வாகனத்தின் சக்கரம் அவர் காலின் மீது ஏறியதில், அவரது கால் எலும்பு பல இடங்களில் முறிந்தது.
தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் அந்த ஓட்டுநர் வெளியிட்டுள்ள வீடியோவில், "நான் ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டுநர். என் குடும்பமே என் வருமானத்தை நம்பித்தான் இருக்கிறது. இப்போது கால் முறிந்த நிலையில் என்னால் வேலைக்குச் செல்ல முடியவில்லை."
"உங்களைப் பார்க்க வந்த இடத்தில் எனக்கு இந்த நிலைமை ஏற்பட்டுவிட்டது. என் மருத்துவச் செலவுகள் மிக அதிகமாக இருப்பதால், அதை ஏற்க நீங்கள் முன்வர வேண்டும். என் குடும்பத்தைக் காப்பாற்ற எனக்கு உதவுங்கள்" என அவர் விஜய்க்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, "தளபதி விஜய் அந்தத் தொண்டரின் மருத்துவச் செலவுகளை முழுமையாக ஏற்றுக் கொள்வார்" என அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே பல ஏழை மாணவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி வரும் விஜய், இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.