பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி - முதலமைச்சர் விஜய்!

 

முதலமைச்சர் விஜய் தனது 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் தமக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்த அனைத்துத் தலைவர்களுக்கும், முக்கியப் பிரமுகர்களுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். 

முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு நாட்டின் முக்கியப் பதவிகளில் உள்ள தலைவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தொலைபேசி வாயிலாக முதலமைச்சரைத் தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பிரதமர் மோடி மற்றும் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆகியோர் தொலைபேசியுடன் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்திலும் தங்களது வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளனர்.

புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் ஆகியோரும் தொலைபேசி மூலம் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

எக்ஸ் சமூக வலைதளம் வாயிலாகப் பல்வேறு மாநில ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் பிற மாநில முதலமைச்சர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சௌகான் மற்றும் ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் வாழ்த்துகளைப் பதிவு செய்துள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), வைகோ (மதிமுக), நயினார் நாகேந்திரன் (பாஜக), தொல். திருமாவளவன் (விசிக), அன்புமணி ராமதாஸ் (பாமக), கமல்ஹாசன் (மநீம), டிடிவி தினகரன் (அமமுக), சீமான் (நாம் தமிழர்) மற்றும் வி.கே. சசிகலா உள்ளிட்ட தமிழகத்தின் முதன்மை அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ளனர்.

தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் வழியாகத் தனக்கு வாழ்த்துத் தெரிவித்த அனைத்துத் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அரசு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.