“தனிஷ்க் நகைக்கடை இதனால் தான் கொள்ளையடித்தேன்” - நிஷாந்த் பரபரப்பு வாக்குமூலம்!

 

மதுரையில் உள்ள பிரபல தனிஷ்க் நகைக்கடையில் அரங்கேறிய பெரும் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக, முக்கியக் குற்றவாளியான நிஷாந்த் தான் எதிர்கொண்ட கடுமையான கடன் பிரச்சனை காரணமாகவே இத்தகைய செயலில் ஈடுபட்டதாகப் போலீஸ் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மதுரை காவல் ஆணையர் ராஜேந்திரன், இச்சம்பவம் குறித்த பல்வேறு திடுக்கிடும் உண்மைகளைப் பகிர்ந்து கொண்டார்: தொடக்கக் கட்ட விசாரணையில், தனது சொந்தக் கடன் தொல்லைகள் மற்றும் நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்காகவே இந்தக் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியதாகக் குற்றவாளி நிஷாந்த் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட மொத்த நகைகளின் சரியான அளவீட்டுப்படி, 11.38 கிலோ எடையுள்ள அனைத்து நகைகளும் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் நகைக்கடை தரப்பிலிருந்து தோராயமாக 15 முதல் 18 கிலோ வரை இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது குறித்தும் ஆணையர் விளக்கம் அளித்தார்.

குற்றவாளி நிஷாந்தின் கைகளில் இருந்த தனித்துவமான டாட்டூக்களே போலீசார் அவரை விரைந்து அடையாளம் கண்டு கைது செய்யப் பெரிதும் உதவியாக இருந்தன. இக்கொள்ளைச் சம்பவத்தில் இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சிக்குத் திட்டம்பற்றி முன்பே தெரியும் என்றும், நிஷாந்த் கொள்ளையடிக்கச் செல்வது குறித்து அவருக்கும் தகவல் இருந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே மீனாட்சி கைது செய்யப்பட்டார். மேலும், கொள்ளைக்குச் செல்ல மீனாட்சி தனது ஸ்கூட்டரைக் கொடுத்து உதவியுள்ளதும், நிஷாந்தின் தந்தை சுரேஷ் கொள்ளையடிக்கப்பட்ட நகைப் பையைத் தனது வீட்டில் பதுக்கி வைத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வழக்கு விசாரணையின் தேவைக்கேற்ப மீனாட்சியின் சமூக வலைதளக் கணக்குகள் முடக்கப்படும் என்றும் காவல் ஆணையர் எச்சரித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள நிஷாந்த் மீது ஏற்கனவே கடந்த 2023-ஆம் ஆண்டு பைக் விபத்து மூலம் மரணத்தை ஏற்படுத்தியதாக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304A-ன் கீழ் வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இக்கொள்ளைச் சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.