ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெச்சரில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய தவெக பிரமுகர்... 11 ஓட்டுநர்கள் கைது!
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் அவசர சிகிச்சைக்குப் பயன்படும் ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெச்சரில் பட்டாக்கத்தியைக் கொண்டு கேக் வெட்டிய தவெக பிரமுகர் உட்பட 11 ஓட்டுநர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சியில் உள்ள ஆம்புலன்ஸ் ஒன்றின் உள்ளே வைக்கப்பட்டிருந்த நோயாளிகளுக்கான ஸ்ட்ரெச்சரின் மீது கேக்கை வைத்து, அதனைப் பட்டாக்கத்தியால் சிலர் பிறந்தநாள் கொண்டாடும் விதமாகக் வெட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
போலீசாரின் விசாரணையில், பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ், 30; த.வெ.க., உறுப்பினர். டி.வி.கே., என்ற பெயரில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு, கோவை ரோட்டில் உள்ள பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்ட் முன்பாக, நண்பர்களுடன் சேர்ந்து தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். அப்போது, ஆம்புலன்ஸ் ஸ்டெச்சரில் கேக் வைத்து, பட்டாக்கத்தியில் கேக் வெட்டி நண்பர்களுக்கு வழங்கினார்.
இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், பொள்ளாச்சியில் செயல்படும் பல்வேறு ஆம்புலன்ஸ் நிறுவனங்களைச் சேர்ந்த ஓட்டுநர்களான சந்தோஷ், சிவகுருநாதன், வாஞ்சிநாதன், சுரேஷ்குமார் உட்பட மொத்தம் 11 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவசர கால சேவையில் ஈடுபட வேண்டிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் முகமூடியை அணிந்து கொண்டு சிலர் இதுபோன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதாகவும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது மற்றும் பொதுமக்களைத் தரக்குறைவாக நடத்துவது போன்ற செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், இதுபோன்ற நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.