தவெக எம்.எல்.ஏ. விழாவில் கார் கண்ணாடி உடைப்பு;நாற்காலிகள் சேதம் - உசிலம்பட்டியில் பரபரப்பு!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சி நடந்த இடத்தில் மர்ம கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உசிலம்பட்டி அருகே உள்ள வாலாந்தூரில் தவெக தலைவரும் எம்.எல்.ஏ-வுமான விஜய் தலைமையில் நடைபெற்ற விழாவில் திடீரெனப் புகுந்த மர்ம கும்பல் ஒன்று, தவெகவில் இணைந்த ஆரியபட்டி பாண்டியன் என்பவரின் காரின் கண்ணாடியை அடித்து உடைத்தது. மேலும் விழா மேடை மற்றும் சுற்றியிருந்த நாற்காலிகளையும அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகத் தவெக தலைவர் விஜய் புகார் தெரிவித்திருந்த நிலையில், அவர் நேரடியாகப் பங்கேற்ற விழாவிலேயே இத்தகைய வன்முறைச் சம்பவம் அரங்கேறியிருப்பது தொண்டர்களிடையேயும் அப்பகுதியிலும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.