பீர் பாட்டிலுடன் குத்தாட்டம் போட்ட தவெக எம்.எல்.ஏ., - வைரலான வீடியோ குறித்து விளக்கம்! 

 

தஞ்சாவூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகச் சட்டமன்ற உறுப்பினர் ஆர். விஜய் சரவணன் கையில் மது பாட்டிலுடன் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள அவர், இது தவெக-விற்கு எதிராகத் திட்டமிட்டு கட்டமைக்கப்படும் பொய்ப் பிரச்சாரம் என்றும், அரசியல் எதிரிகளின் மலிவான செயல் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தற்போது பரப்பப்படும் அந்த வீடியோ 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனிப்பட்ட நிகழ்வின் போது எடுக்கப்பட்டது என்றும், அதைத் தேர்தல் வெற்றி கொண்டாட்டமாகச் சித்தரிப்பது முற்றிலும் தவறு என்றும் அவர் கூறியுள்ளார்.

மக்களிடையே வீண் பதற்றத்தை உருவாக்கித் தனது பிம்பத்தைச் சிதைக்க முயலும் இத்தகைய கீழ்த்தரமான வேலைகளைத் தொண்டர்கள் நம்ப வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த அவதூறு புகாரைப் பரப்புவதற்காகப் புதிய வாட்ஸ்அப் எண்கள் மூலம் சிலருக்கு அந்த வீடியோ அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதன் பின்னணியில் உள்ள நபர்கள் மீது சைபர் கிரைம் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இத்தகைய திசைதிருப்பல்களைத் தாண்டித் தஞ்சை மக்களின் வளர்ச்சிக்காகத் தனது பணிகள் முழு வீச்சில் தொடரும் என அவர் உறுதியளித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முடக்க நினைப்பவர்களின் சதி முறியடிக்கப்படும் என்றும், இதுபோன்ற வதந்திகளுக்குப் பொதுமக்கள் செவிசாய்க்க வேண்டாம் என்றும் விஜய் சரவணன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.