கோயிலில் பிரதிஷ்டை விழாவில் அடிக்கல் நாட்டிய தவெக எம்.எல்.ஏ. தாஹிரா - மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்திய நெகிழ்ச்சி நிகழ்வு!

 

ராணிப்பேட்டை மாவட்டம், மாந்தாங்கல் ஊராட்சிப் பகுதியில் உள்ள கோயிலில் நடைபெற்ற பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர் தாஹிரா கலந்துகொண்டது அப்பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மாந்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் திருக்கோயில் வளாகத்தில், புதியதாக முருகர் மற்றும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கான தொடக்க விழா நடைபெற்றது.

சமத்துவபுரம் பகுதி மக்களின் அழைப்பை ஏற்று இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தாஹிரா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். அவருக்கு அப்பகுதி பெண்களும் கட்சி நிர்வாகிகளும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மூலவர் ஸ்ரீ கெங்கையம்மனைத் தரிசித்ததைத் தொடர்ந்து, முருகர் மற்றும் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட உள்ள இடத்தில் நடைபெற்ற சிறப்புப் பூஜைகளில் அவர் பங்கேற்றார். வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற இந்து முறைப்படி கூடிய வழிபாட்டில் கலந்துகொண்டு சிலைகள் அமைப்பதற்கான பணியைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.

சமத்துவபுரம் என்ற பெயருக்கு ஏற்ப, மத வேறுபாடுகளைக் கடந்து சகோதரத்துவத்தையும் ஒற்றுமையையும் வலியுறுத்தும் வகையில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ. தாஹிரா இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டியது அப்பகுதி மக்களிடையே மிகுந்த நெகிழ்ச்சியையும் பாராட்டியையும் பெற்றுத் தந்துள்ளது.