அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தவெக எம்.எல்.ஏ., - பெரம்பலூர் அருகே லாரி மோதி கார் விபத்து!
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரை முடித்துவிட்டுச் சென்னையிலிருந்து திருச்சி நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த தவெக முக்கிய நிர்வாகியும், திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நவல்பட்டு விஜியின் கார், பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் கார் பலத்த சேதமடைந்த போதிலும், எம்.எல்.ஏ மற்றும் அவருடன் பயணித்தவர்கள் எவ்விதக் காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ-வான நவல்பட்டு விஜி, சென்னையில் நடைபெற்று வந்த தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தொடரில் பங்கேற்று விட்டு, நேற்று நள்ளிரவு தனது காரில் திருச்சி நோக்கிப் புறப்பட்டுள்ளார். இன்று காலை அவரது கார் பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது, கள்ளக்குறிச்சியிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி நெற்கதிர் அறுக்கும் இயந்திரத்தை ஏற்றிக் கொண்டு பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எம்.எல்.ஏ காரின் பின்புறத்தில் மோதியது. லாரி மோதிய வேகத்தில் எம்.எல்.ஏ-வின் சொகுசு காரின் பின்புறப் பகுதி கடுமையாக நசுங்கிச் சேதமடைந்தது.
எனினும், காரின் பாதுகாப்பு ஏர்பேக் கட்டமைப்புகள் உரிய நேரத்தில் செயல்பட்டதாலும், நல்வாய்ப்பினாலும் காரில் அமர்ந்திருந்த எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி, அவரது ஓட்டுநர் மற்றும் பாதுகாவலர் ஆகியோர் எவ்விதக் காயமும் இன்றி நூலிழையில் உயிர் தப்பினர்.
சம்பவம் குறித்துத் தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து, சேதமடைந்த காரை மீட்டுப் போக்குவரத்தைச் சீர்செய்தனர். மேலும், விபத்திற்குக் காரணமான லாரி ஓட்டுநரைப் பிடித்துப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளை தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய்யின் 52-ஆவது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ள சூழலில், கட்சியின் முக்கிய எம்.எல்.ஏ-வான நவல்பட்டு விஜி கார் விபத்தில் சிக்கிப் பாதுகாப்பாக உயிர் தப்பியுள்ளார் என்ற செய்தி தவெக தொண்டர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.