தவெக MLA தங்கபாண்டியன் காரை முற்றுகையிட்ட தொண்டர்கள்; மதுரையில் பரபரப்பு!

 

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி தவெக எம்.எல்.ஏ. தங்கபாண்டியனின் காரை, அக்கட்சியின் சொந்த நிர்வாகிகளே முற்றுகையிட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சிக்காக உழைத்தவர்களைப் புறக்கணித்துவிட்டு, மாற்றுக்கட்சிகளில் இருந்து அண்மையில் இணைந்தவர்களுக்கு முக்கியப் பதவிகள் வழங்கப்படுவதாகக் கூறி இந்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

மதுரையில் தவெக எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் தனது காரில் சென்றுகொண்டிருந்தபோது, அக்கட்சியின் அதிருப்தி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திடீரென அவரது காரை வழிமறித்து முற்றுகையிட்டனர். தேர்தல் களத்தில் இரவு பகலாகக் கட்சிக்காகக் கடுமையாக உழைத்த தங்களுக்குக் கட்சி நிர்வாகத்தில் தகுந்த பொறுப்புகளோ அல்லது உரிய அங்கீகாரமோ வழங்கப்படவில்லை என்று அவர்கள் ஓங்கி முழக்கமிட்டனர். மாறாக, சமீபத்தில் பிற கட்சிகளில் இருந்து தவெக-வில் இணைந்த புதியவர்களுக்கு முக்கியப் பதவிகள் வாரி வழங்கப்படுவதாகக் கூறி எம்.எல்.ஏ-விடம் அவர்கள் சத்தமிட்டுச் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

சொந்தக் கட்சியினரின் இந்தத் திடீர் எதிர்ப்பாலும், காரைச் சுற்றிலும் தொண்டர்கள் திரண்டதாலும் அங்குச் சலசலப்பான சூழல் உருவானது. இருப்பினும், காரை விட்டு கீழே இறங்க மறுத்த எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், காரின் கண்ணாடியை மட்டும் லேசாக இறக்கி, "உங்களுக்கு என்ன கோரிக்கைகள் இருந்தாலும், எதுவாக இருந்தாலும் அதை மனுவாக எழுதிக் கொடுங்கள், பிறகு பார்க்கலாம்" என்று சுருக்கமாகக் கூறிவிட்டு, காரை எடுக்கச் சொல்லி அங்கிருந்து உடனடியாகப் புறப்பட்டுச் சென்றார்.

கட்சியின் உட்கட்சிப் பூசல் மற்றும் பதவிப் பங்கீடு விவகாரம் இப்படிப் பகிரங்கமாகத் தெருவுக்கு வந்து எம்.எல்.ஏ காரே முற்றுகையிடப்பட்ட சம்பவம், மதுரையில் தவெக வட்டாரத்தில் தற்பொழுது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.