தவெக MLAவின் ஆபாச மெசேஜ் சர்ச்சை.... முகாமில் பங்கேற்காத கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்!

 

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு அத்தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான சர்ச்சைக்குரிய குறுஞ்செய்தி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேற்று நடைபெறவிருந்த மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் அவர் பங்கேற்கவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவின் செல்போன் எண்ணுக்கு, கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் தனது செல்போனில் இருந்து சர்ச்சைக்குரிய வகையில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கடுமையான எதிர்ப்பையும் கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், கல்வராயன்மலையில் உள்ள கிளாக்காடு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நேற்று மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மாவட்ட ஆட்சியர் பத்மஜா தலைமையில் நடைபெறுவதாக இருந்த இந்த முகாமிற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் முழுமையாகச் செய்யப்பட்டிருந்தன.

ஆனால், நேற்று நடைபெற்ற முகாமில் மாவட்ட ஆட்சியர் பத்மஜா நேரில் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும் மாவட்ட ஆட்சியர் பத்மஜா நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் செல்லாமல், தனது முகாம் அலுவலகத்திலேயே இருந்து வழக்கமான அலுவலகப் பணிகளை மேற்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துணை சபாநாயகரும் மனு கொடுக்க வந்தவரை அடித்து விரட்டியதாகவும், மிரட்டி வீடியோ பதிவு செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது தவெகவினரிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.