திருச்சி கிழக்கில் மாஸ் காட்டும் தவெக தொண்டர்கள்... முந்துகிறதா விசில் சின்னம்?! விஜய் கோட்டையில் ‘காக்கி - வெள்ளை’ அலை!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது முதல் தேர்தல் களத்தைத் திருச்சி கிழக்குத் தொகுதியில் தொடங்கியுள்ள நிலையில், இன்று அங்குப் பதிவாகும் வாக்குகள் மாநிலத்தின் கவனத்தை ஈர்த்துள்ளன.
திருச்சி கிழக்குத் தொகுதியில் உள்ள பல வாக்குச்சாவடிகளில் இன்று ஒரு விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான காட்சி அரங்கேறியது. தவெக தலைவர் விஜய் தனது பிரசாரங்களின் போது அணியும் அதே பாணியிலான வெள்ளைச் சட்டை மற்றும் காக்கி பேண்ட் அணிந்து நூற்றுக்கணக்கான தொண்டர்கள் வாக்குச்சாவடிகளுக்குத் திரண்டனர்.
ஆண்கள் மட்டுமின்றி, ஏராளமான பெண் தொண்டர்களும் இதே போன்ற உடை அலங்காரத்தில் வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். இது தவெக-வின் 'விசில்' சின்னத்திற்கான ஒரு மௌனமான மற்றும் வலுவான ஆதரவுப் பிரசாரமாகவே அங்குப் பார்க்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள 2,787 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
காலை 11 மணி நிலவரம்: திருச்சி கிழக்குத் தொகுதியில் 37.03% வாக்குகள் பதிவாகியிருந்தன. 1 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 56.81% பதிவாகியுள்ள நிலையில், திருச்சி கிழக்கிலும் வாக்குப்பதிவு மதிய வெயிலையும் பொருட்படுத்தாமல் விறுவிறுப்பாக உயர்ந்து வருகிறது.
மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. விஜய் போட்டியிடும் தொகுதி என்பதால், திருச்சி கிழக்கில் மட்டும் கூடுதல் சிசிடிவி கண்காணிப்பு மற்றும் போலீஸ் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.