19 ஆண்டுகால ஐபிஎல் சகாப்தம் நிறைவு.. 'கேப்டன் கூல்' எம்.எஸ். தோனியின் சாதனைகளின் முழுப் பார்வை!
இந்திய கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த தலைவர்களில் ஒருவரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடையாளமாகத் திகழ்ந்தவருமான 45 வயதான மகேந்திர சிங் தோனி, ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து வீரராக ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சென்னை மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களைப் பெரும் அதிர்ச்சியிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழந்தால் தொலைக்காட்சியை அணைத்துவிடும் ரசிகர்களுக்கு மத்தியில், "நான் களத்தில் இருக்கும் வரை போட்டி முடிந்துவிடாது" என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை விதைத்தவர் தோனி. இக்கட்டான சூழல்களில் அணியைச் சரிவிலிருந்து மீட்டு, கடைசிப் பந்து வரை பதற்றமின்றி வெற்றியைத் தேடித்தரும் அவரது பாணியே அவரை 'கேப்டன் கூல்' என ரசிகர்களால் கொண்டாட வைத்தது.
இந்திய அணிக்கு 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் கோப்பை ஆகிய மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்த தோனி, 2019-ஆம் ஆண்டிற்குப் பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பிறகு ஐபிஎல் தொடரில் மட்டுமே தனது மட்டையால் ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்.
ஐபிஎல் களத்தில் 19 ஆண்டுகால பயணம்:
2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியது முதல் கடந்த 19 ஆண்டுகளாகத் தோனி இத்தொடரில் விளையாடியுள்ளார். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 17 ஆண்டுகளும், புனே அணிக்காக 2 ஆண்டுகளும் களம் கண்டு, யாராலும் முறியடிக்க முடியாத பல வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2010, 2011, 2018, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் என மொத்தம் 5 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தையும், 2 முறை சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பையையும் வென்று கொடுத்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் இன்னிங்ஸின் 20-வது ஓவரில் மட்டும் 700-க்கும் மேற்பட்ட ரன்களையும், 60-க்கும் அதிகமான சிக்ஸர்களையும் விளாசிய ஒரே பேட்ஸ்மேன் என்ற பெருமை இவருக்கே உரியது.
கடந்த 2023-ஆம் ஆண்டு சிஎஸ்கே கோப்பையை வென்றபோது தோனியின் வயது 41 ஆண்டுகள் 325 நாட்கள் ஆகும். இதன் மூலம் ஐபிஎல் கோப்பையை வென்ற மிக வயதான கேப்டன் என்ற சாதனையைப் படைத்தார். ஐபிஎல் வரலாற்றில் ஒரு சதம் கூட அடிக்காமல் 5,000 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே வீரர் தோனி ஆவார் (அதிகபட்சம் 84*).
விக்கெட் கீப்பராக 150-க்கும் மேற்பட்ட டிஸ்மிஸல்களைச் செய்த முதல் வீரர் என்ற சாதனையுடன், 42-க்கும் மேற்பட்ட ஸ்டம்பிங்குகளைச் செய்துள்ளார். குறிப்பாக, 0.08 வினாடிகளில் ஸ்டம்பிங் செய்து உலக சாதனை படைத்ததும் ஐபிஎல் களத்தில்தான்.
ஐபிஎல் வரலாற்றில் 200-க்கும் மேற்பட்ட போட்டிகளுக்குத் தலைமை தாங்கிய ஒரே கேப்டன் தோனி (226 போட்டிகள் - 133 வெற்றிகள்). மேலும், ஒரு கேப்டனாக 12 முறை அணியை பிளே-ஆப் சுற்றுக்கும், 11 முறை இறுதிப் போட்டிக்கும் (சிஎஸ்கே-வுடன் 10 முறை, புனே அணியுடன் 1 முறை) அழைத்துச் சென்றுள்ளார்.
ஐபிஎல் தொடரில் தோனியின் ஒட்டுமொத்த பேட்டிங் புள்ளிவிவரம்:
மொத்தப் போட்டிகள்: 278 (இன்னிங்ஸ்: 242), மொத்த ரன்கள்: 5,439, அதிகபட்ச ரன்கள்: 84* (நாட் அவுட்), பேட்டிங் சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட்: சராசரி 38.30 | ஸ்ட்ரைக் ரேட் 137.45, அரைசதங்கள் (50s): 24, பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள்: 375 பவுண்டரிகள் | 264 சிக்ஸர்கள், ஆட்டமிழக்காமல் நின்றவை (Not Outs): 100 முறை (ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை நாட் அவுட் ஆன வீரர்)
புதிய பரிணாமத்தில் 'தல':
இன்னும் ஒரு சீசனாவது மஞ்சள் உடையில் தோனியைக் களத்தில் பார்க்க மாட்டோமா என ஏங்கிய ரசிகர்களுக்கு இந்த ஓய்வு அறிவிப்பு சற்று ஏமாற்றத்தை அளித்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பு ரசிகர்களுக்குப் பெரும் ஆறுதலைத் தந்துள்ளது. ஐபிஎல் தொடரில் இருந்து வீரராக விடைபெற்றாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராகத் (Mentor) தோனி புதிய பரிணாமத்தில் தொடர்ந்து பயணிப்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.