undefined

இன்று +2 பொதுத்தேர்வு தொடக்கம்.. 3,412 மையங்களில் 8.27 லட்சம் பேர் எழுதுகின்றனர்!

 

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்று மார்ச் 2ம் தேதி தொடங்குகின்றன.  இன்று தொடங்கி மார்ச் 26ம் தேதி வரை நடைபெறும் இந்தப் பொதுத்தேர்வை எதிர்கொள்ளத் தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் தயார் நிலையில் உள்ளனர். பள்ளி மாணவர்கள் 7,99,692 பேர் மற்றும் தனித்தேர்வர்கள் 27,783 பேர் என மொத்தம் 8,27,475 பேர் தேர்வெழுத உள்ளனர். மாநிலம் முழுவதும் 3,412 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன. 281 சிறைவாசிகளும் இந்தப் பொதுத்தேர்வை எழுதச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 49,000 ஆசிரியர்கள் கண்காணிப்புப் பணியிலும், 4,900-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினரும் முறைகேடுகளைத் தடுக்கப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்வுகள் காலை 10 மணிக்குத் தொடங்கி மதியம் 1.15 மணிக்கு நிறைவடையும். காலை 10.00 - 10.10: வினாத்தாளைப் படிக்க 10 நிமிடங்கள் ஒதுக்கப்படும். காலை 10.10 - 10.15: விடைத்தாளில் உள்ள விவரங்களைச் சரிபார்த்துக் கையொப்பமிட 5 நிமிடங்கள். காலை 10.15 - 1.15: தேர்வு எழுதும் நேரம் (மொத்தம் 3 மணி நேரம்). அறைக் கண்காணிப்பாளர்கள் காலை 8.45 மணிக்குள் வந்து தங்களது செல்போனை அணைத்துத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைக்க வேண்டும். மீறினால் கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டு முதல் கணக்குப்பதிவியல் (Accountancy) பாடத் தேர்வுக்குச் சாதாரண கால்குலேட்டர்களை பயன்படுத்த மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேர்வின் போது ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டால் உடனடியாகக் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்படும்.

தேர்வர்கள் மற்றும் பெற்றோர்களுக்குத் தேர்வு தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 9498383075, 9498383076,  ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

சென்னையில் மட்டும் 250 மையங்களில் மொத்தம் 64,359 மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். வினாத்தாள்களைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்ல 65 வழித்தடங்கள் அமைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 11ம் வகுப்பு மாணவர்களுக்கான விடுபட்ட தேர்வுகள் நாளை (மார்ச் 3) தொடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.