“25 வருட தமிழகத்தின் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட்டுள்ளது... தீர ஆராய்ந்த பிறகே திமுக ஆதரவு தந்துள்ளது” - ஸ்டாலின் விளக்கம்! 

 

தொகுதி மறுவரையறை மசோதாவில் தமிழ்நாடு முன்வைத்த இரண்டு முக்கியமான கோரிக்கைகளும் இடம்பெற்றுள்ளதைத் தொடர்ந்து, தீர ஆராய்ந்த பிறகே தி.மு.க. ஆதரவு அளித்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அவர், இம்முடிவின் மூலம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு  தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். "தொகுதி மறுவரையறை மசோதா திரும்பக் கொண்டு வரப்படும் போது திமுக என்ன நிலைப்பாடு எடுக்கும் என்று இந்தியா முழுவதும் பேசப்பட்டு வந்தது. அதற்கான தெளிவான பதிலை நேற்று நாம் கொடுத்துள்ளோம். உணர்ச்சிவசப்படாமல், தொலைநோக்குப் பார்வையுடன் தொகுதி மறுவரையறை பிரச்சினையை நாம் அணுகியுள்ளோம்" என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை குறையும் என இந்தியாவிலேயே முதன்முதலாக எச்சரிக்கை மணி அடித்தது திமுக தான் என்று சுட்டிக்காட்டிய அவர், "கடந்த ஏப்ரல் மாதம் உரிய கால அவகாசம் தராமல் கொண்டு வரப்பட்ட மர்ம மசோதாவை நாடாளுமன்றத்தில் தோற்கடித்து பாஜகவுக்குக் கடும் அழுத்தம் கொடுத்தோம். தற்போதைய மசோதாவின் நகலில், 2024-ஆம் ஆண்டு சட்டமன்றத் தீர்மானம் வாயிலாக நாம் முன்வைத்த இரண்டு முக்கியக் கோரிக்கைகளுமே இடம்பெற்றுள்ளன. இது நமது மூன்றாண்டுகாலத் தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி" எனத் தெரிவித்தார்.

"நாம் குரல் எழுப்பாமல் இருந்திருந்தால், கடைசியாக எடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளை மாற்றித் தமிழ்நாட்டின் சதவீதத்தைக் குறைத்திருப்பார்கள். 1967-ஆம் ஆண்டு மறுசீரமைப்பின் போது 42-ஆக இருந்த தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகள் 39-ஆகக் குறைக்கப்பட்டன. ஆனால், தற்போது 1971-ஆம் ஆண்டு சென்சஸ் அடிப்படையிலேயே நமது சதவீதத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் தொகுதிகள் உயர்வதையும், அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்படுவதையும் உறுதி செய்துள்ளோம்" என அவர் விளக்கினார்.

"எப்போது வாள் எடுக்க வேண்டும், எப்போது கேடயம் எடுக்க வேண்டும் என்பதைச் சரியாகத் தீர்மானிக்க வேண்டும் எனத் தலைவர் கலைஞர் சொல்லியிருக்கிறார். அதன்படி நடந்து, நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நமது நிலைப்பாட்டைத் தயக்கமின்றி ஓங்கிச் சொல்லுங்கள்" என திமுக எம்.பி.க்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.